திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழி வாங்குவதாக சீமான் கூறியிருந்த நிலையில் எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சிலர் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வருண் குமார் ஐபிஎஸ் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை.
இப்படியான நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருண் குமார் ஐபிஎஸ், சீமான் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதனால் இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என் மனைவிக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததால் தான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். நிச்சயம் அதனை நான் வாபஸ் பெற போவதில்லை. இதற்கு கட்டாயம் நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன். சீமான் பற்றி எல்லாம் நான் பேசவே விரும்பவில்லை. அவர் ஒரு மைக் புலிகேசி, தரம் குறைந்த மனிதர் என வருண்குமார் விமர்சித்துள்ளார்.
