அரிய மண் உலோகங்கள் (Rare Earth Metals) மீதான சீனாவின் நீண்டகால ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், ஜப்பான் தற்போது கடலுக்கடியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாரிக்கத் தேவையான இந்த கனிமங்களுக்கு இதுவரை உலகம் சீனாவையே சார்ந்திருந்தது.
சமீபகாலமாக சீனா விதித்து வரும் ஏற்றுமதித் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள, இந்தியாவின் நட்பு நாடான ஜப்பான் தனது கடல் பகுதியில் 6 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள சேற்றிலிருந்து இந்த விலைமதிப்பற்ற தாதுக்களைப் பிரித்தெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஜப்பானின் ‘சிக்யு’ (Chikyu) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக் கப்பல் டோக்கியோவிலிருந்து 1,900 கி.மீ தொலைவில் உள்ள மினாமிடோரி தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 130 பணியாளர்களுடன் சென்றுள்ள இந்தக் கப்பல், கடலின் மேற்பரப்பில் இருந்து 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள மண்ணை எடுத்து வந்து ஆய்வு செய்யும்.
இவ்வளவு ஆழத்தில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இந்த ஆய்வுப் பணி வெற்றிகரமாக முடிந்து, பிப்ரவரி 14-ம் தேதிக்குள் கப்பல் கரை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட இந்த முயற்சி, தொழில்நுட்பத் துறையில் சீனாவின் “பிளாக்மெயில்” அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.
சீனாவைச் சார்ந்திருக்காமல் தங்களுக்குத் தேவையான கனிமங்களை ஜப்பான் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் இந்த நடவடிக்கை, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜப்பானின் இந்தத் துணிச்சலான முயற்சி வெற்றி பெற்றால், அரிய மண் உலோகங்கள் சந்தையில் சீனாவின் ஏகபோக உரிமை முடிவுக்கு வருவதுடன், தொழில்நுட்பத் துறையில் மற்ற நாடுகளும் தன்னிறைவு பெற வழிவகுக்கும்.
