அமெரிக்காவின் தலையீட்டால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வெனிசுலாவின் எண்ணெய் வளம் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்குமா மற்றும் அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்கா இந்த எண்ணெயை சர்வதேச சந்தை விலையான சுமார் 60 டாலருக்கு விற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணெய் நேரடியாக வெனிசுலாவிலிருந்து வருமா அல்லது அமெரிக்கா வழியாக வருமா என்பதைப் பொறுத்தே அதன் கப்பல் போக்குவரத்து செலவு அமையும்.
ஒருவேளை அமெரிக்கா வழியாக வந்தால் இந்தியாவுக்கு இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய சூழலில், ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு அதிக லாபகரமானதாகவே வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 15 டாலர் வரை தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது, இதனால் இந்தியாவுக்கு ஒரு பேரல் சுமார் 50 முதல் 53 டாலர் விலையிலேயே கிடைக்கிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு வெனிசுலாவை விட சற்று அதிகம் என்றாலும், ஒட்டுமொத்த விலையை ஒப்பிடும்போது ரஷ்ய எண்ணெயே மலிவானது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு வெனிசுலா எண்ணெயை விட ரஷ்ய எண்ணெயே தற்போதைக்குச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
