தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி திடீர் சந்திப்பு நடத்தினார்.
இந்த நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, “கடவுள் ஆசிர்வாதத்தில் தமிழகத்தில் விரைவில் நல்லதே நடக்கும்” என ஒற்றை வரியில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்கான நல்லாட்சியை வழங்க எடப்பாடியார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்; விரைவில் அவர் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்” என அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக நீடிக்கிறதா என்ற செய்தியாளர்களின் கிடுக்கிப்பிடி கேள்விக்கு, சிரித்தபடியே பதில் கூற மறுத்து நழுவிய தம்பிதுரை, இபிஎஸ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியைப் பற்றி மூச்சு விடாமல், மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என தம்பிதுரை முழங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
