சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆலங்குடி ஊராட்சியின் மேலமாகாணம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரவு அடையாளம் தெரியாத திருடர்கள் சிலர் பள்ளியின் கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பள்ளிக்குள் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை தேடிய அவர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு, அவர்கள் சத்துணவு கூடத்தின் கதவையும் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு மாணவர்களுக்கு சத்துணவிற்காக வைத்திருந்த முட்டைகள், மற்றும் சமையலுக்காக இருந்த கியாஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி முட்டை ஆம்லெட் செய்தும், சில முட்டைகளை அவித்தும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், பள்ளியின் கணினி பிரிவு கட்டிடத்திற்குள்ளும் உடைத்து நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சில கணினி உபகரணங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குள் நடந்த திருட்டுச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்துப் பள்ளி நிர்வாகம் சார்பில் நாச்சியார்புரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து, திருடர்களைத் தேடி வருகின்றனர். மேலும், அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
