சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தவித்து வரும் வேளையில், கோவையைச் சேர்ந்த ‘படையல்’ சிவா அடுப்பில்லாமல் 2000-க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்து அசத்தி வருகிறார். எண்ணெய் இல்லா, அடுப்பில்லா என்ற இயற்கை முறையைப் பின்பற்றி கடந்த 13 ஆண்டுகளாக இவர் உணவகத்தை நடத்தி வருகிறார்.

இட்லி, பொங்கல் முதல் இன்றைய தலைமுறைக்கு பிடித்த பீட்சா, பர்கர், நூடுல்ஸ் வரை அனைத்தையும் அடுப்பின் உதவியின்றி இவரால் சுவையாகச் செய்ய முடிகிறது.இந்த முறையில் உணவை வேகவைக்க நெருப்பிற்குப் பதிலாக எலுமிச்சை சாறு, தேங்காய் பால் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற 8 வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, வாழைப்பூவை எலுமிச்சை சாறில் ஊறவைப்பதன் மூலம் அதன் கடினத்தன்மை மாறி 15 நிமிடங்களில் உண்ணும் பதத்திற்கு வெந்துவிடுகிறது. வழக்கமாக இட்லி தயாரிக்க நீண்ட நேரம் தேவைப்படும் நிலையில், இந்த இயற்கை முறையில் வெறும் 15 நிமிடங்களில் இட்லியைத் தயார் செய்துவிடலாம் என்பது வியக்கத்தக்க விஷயமாக உள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த உணவு முறையில் மாட்டுப் பாலுக்குப் பதிலாகத் தேங்காய் பாலையே பயன்படுத்துகின்றனர். திருமணச் சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த முறையில் உணவுகளை வழங்கி வரும் சிவா, இதற்காக 6 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற நெருக்கடியான சூழலில், செலவில்லாத மற்றும் ஆரோக்கியமான இந்த “நோ ஆயில் நோ பாயில்” முறை மக்களிடையே தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.