கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி மற்றும் அவனது நண்பன் மோகன் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இவர்கள் இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கார்த்தி மீது, அங்குள்ள சக கைதிகள் கடும் ஆத்திரமடைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
10 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து ஆத்திரமடைந்த கைதிகள், சிறைக்குள்ளேயே கார்த்தியை வெளுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிறை வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காயமடைந்த கார்த்திக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இச்சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
