திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகப்பிரியா(17) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ஒரு சிறுவனுடன் சண்முகப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இதனால் சண்முகப்பிரியா கர்ப்பமானார்.
அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முக பிரியாவை ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சண்முகப்பிரியாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதால் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சண்முகப்பிரியா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்த திருத்தணி மகளிர் போலீசார் கருவை கலைத்த நர்ஸ் உதவியாளர் ஆகிய இரண்டு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனிடமும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
