கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரிக்கெட் பயிற்சி பெற வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரான மனு (40) என்பவருக்குத் திருவனந்தபுரம் போக்ஸோ  சிறப்பு நீதிமன்றம் மேலும் 48 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹79,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவருக்கு, கிரிக்கெட் பயிற்சி அளிப்பதாகக் கூறி பயிற்சியாளர் மனு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அச்சிறுமியின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிடுவதாக மிரட்டியதால், பயந்துபோன சிறுமி இச்சம்பவத்தை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார். கடந்த 2024-இல் ஒரு போட்டியில் விளையாட வந்தபோது, தற்செயலாகப் பயிற்சியாளரைக் கண்டு அச்சிறுமி கதறி அழுததை அடுத்து, இந்த விவகாரம் சைல்டுலைன் மற்றும் காவல்துறையின் கவனத்திற்குச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பயிற்சியாளர் மனு மீது மொத்தம் 6 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூன்றாவது வழக்கில் நீதிபதி அஞ்சு மீரா பிர்லா இந்த 48 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக, முதல் இரண்டு வழக்குகளில் இவருக்கு முறையே 16 ஆண்டுகள் மற்றும் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தண்டனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டும் என்பதால், முந்தைய தண்டனைக் காலம் முடிந்த பிறகே இந்த 48 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நான்காவது வழக்கிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளைத் தன் ஆசைக்கு இரையாக்கிய காமுகப் பயிற்சியாளருக்குத் தொடர் தண்டனைகள் வழங்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.