மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆதர்தால் பகுதியில் அமைந்துள்ள சிம்பாய்சிஸ் பள்ளியில், ஒரு மாணவன் மீது கத்தியுடன் வெறித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் துணியை கட்டி, அடையாளம் தெரியாமல் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞர், மாணவனை நேரடியாக கத்தியால் தாக்கியுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நிகழ்ந்ததுடன், பள்ளியின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இந்த திடுக்கிடும் சூழ்நிலையில், பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளி  தப்பிச் செல்லமுன் பிடித்தனர். விசாரணையில், இந்த தாக்குதல் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கருத்து வாக்குவாதம் காரணமாக உருவானதாகவும், தாக்கிய இளைஞர் சுகாகி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தாக்குதலுக்கு உட்பட்ட மாணவனையே பள்ளியிலிருந்து ரஸ்டிகேட் (புறந்தள்ளல்) செய்துள்ளனர்.

இதனால் கொதித்த மாணவனின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கும், தாக்கிய இளைஞருக்கும் எதிராக நேரடியாக போலீசில் புகார் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஆதர்தால் போலீசார் விசாரணையை தொடங்கி, மாணவனுக்காக நீதியும் பாதுகாப்பும் தேவை என நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனின் குடும்பம், “தாக்கியவருக்கு பதிலாக நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம்!” என வேதனை தெரிவித்து, பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.