ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி என அடுத்தடுத்த மூன்று தோல்விகளால் துவண்டு போயிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. சிஎஸ்கே-வின் இளம் நட்சத்திரமான 18 வயது ஆயுஷ் மத்ரே தனது வ்லாக் (Vlog) வீடியோவில், காயத்தினால் ஓய்வில் இருக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் ஜாலியாகப் பேசும் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘மாஸ்’ காட்டி வருகிறது.

​காலில் ஏற்பட்ட காயம் (Calf Injury) காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாடாத தோனி, தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் இல்லாததால் சிஎஸ்கே-வின் ஃபினிஷிங் மற்றும் ஃபீல்டிங் வியூகங்கள் பலவீனமாக உள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனி விரைவில் குணமடைந்து வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியிலோ அல்லது ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கும் மும்பை இந்தியன்ஸ் (MI) மோதலிலோ மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.