கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அங்கு காரில் வந்த சில மர்ம நபர்கள் லாரியில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, டிரைவரை மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அந்த லாரி டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து நவலூர் உட்பட்ட பகுதியில் அந்த மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தப்பியோட முயற்சித்த போஸ் (25), வெள்ளை பாண்டி (22), வட்டம் சூர்யா (27) ஆகியோர் பாலத்திலிருந்து கீழே குதித்தனர்.
இதில் இவர்கள் 3 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து முத்து மணிகண்டன் (25), பிரவீன்குமார் (28) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து 26 லட்சம் ரொக்க பணம், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சினிமா பாணியில் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
