ரஷ்யாவில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க, இந்தியாவிலிருந்து ஒரு குழுவினர் அங்குச் சென்று சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் தங்கியுள்ள இந்த 17 பேர் கொண்ட குழுவில் மென்பொருள் உருவாக்குநர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பல்வேறு பின்னணி கொண்டவர்கள் உள்ளனர்.
தங்குமிடம், உணவு போன்ற வசதிகளுடன் இவர்களுக்கு மாதம் சுமார் 1.1 லட்சம் ரூபாய் (1,00,000 ரூபிள்கள்) ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தக் குழுவில் உள்ள 26 வயதான முகேஷ் மண்டல் என்ற இளைஞர், தான் முன்பு மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய மென்பொருள் துறையில் பணியாற்றியதாகக் கூறுகிறார்.
ஒரு மென்பொருள் பொறியாளர் ஏன் இந்த வேலையைச் செய்கிறார் எனக் கேட்டதற்கு, “இந்தியர்களைப் பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம்; வேலை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அதைச் சிறப்பாகச் செய்வதே எங்கள் கடமை” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். ஒரு வருடம் கடினமாக உழைத்துச் சேமித்த பிறகு, மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக உள்ளது.
