உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி நாடான சீனா, தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் யான்டாய் நகருக்கு அருகிலுள்ள லைஜோ கடற்பகுதியில் இந்த பிரம்மாண்ட தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,900 டன்கள் (39 லட்சம் கிலோ) தங்கம் இங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சீனாவின் ஒட்டுமொத்த தேசிய தங்க இருப்பில் சுமார் 26 சதவீதமாகும். ஏற்கனவே தங்கம் உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சீனா, கையிருப்பில் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு சீனாவின் பொருளாதார வலிமையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தங்கப் படிமம் கண்டறியப்பட்ட லைஜோ பகுதி, தற்போது சீனாவின் தங்கம் இருப்பு மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கனிம வளங்களை ஆராய்வதில் சீனா அதிக முதலீடு செய்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன ரேடார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தக் கடலடி சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சுரங்கத்திலிருந்து ஒரு டன் தாதுவுக்கு சராசரியாக 4.2 கிராம் தங்கம் வரை கிடைக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சீனாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.