தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தத் துறை வழங்கப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தச் சாதி சர்ச்சை குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசுகையில், “எங்கள் தவெக அரசு தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சாதி, மத, இன பாகுபாடுகளைக் கடந்து செயல்படும் மதச்சார்பற்ற சமூக நீதி அரசு ஆகும். தலைவர் விஜய் யாருக்கும் சாதியைப் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கவில்லை;

மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல மனநிலை இருக்கிறதா என்பதைப் பார்த்துதான் பதவியை ஒப்படைத்துள்ளார். மக்கள் என்னை ரமேஷ் என்ற சாதியாகப் பார்க்காமல், திரையில் கொண்டாடிய முதலமைச்சர் விஜய்யின் முகமாகப் பார்த்துதான் வாக்களித்துள்ளனர். அவரிடம் இப்படி சாதி, மதம் பார்த்துப் பிரிவினை செய்யும் எண்ணம் துளியும் கிடையாது” என்று அமைச்சர் ரமேஷ் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.