சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் அதிரடி நடவடிக்கையாக சில நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், மேலும் எந்தெந்த கட்சிகள் இந்த அணியில் இணைவது, அதேபோல் நடிகர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக பாஜகவுடன் இணைந்து பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், வடசென்னை மாவட்டத்தில் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கம் மற்றும் அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்” வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை நிர்வாகி ஏ.ஏ. கலையரசும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவர்களுடன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ. சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம். இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம். கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிர்வாக மாற்றங்கள், அதிமுகவில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
