அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனி குழுவை அமைத்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைமை, திமுகவுடன் கூட்டணி பேசுவதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு ஏற்கனவே தமிழக முதல்வருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. திமுகவும் தனது பேச்சுவார்த்தை குழுவை அமைத்ததும், கூட்டணி தொடர்பான பேச்சுகள் மீண்டும் தொடரும் என்றார்.

விஜய் அரசியலுக்கு வருவது திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கட்சி தலைமையே முடிவு எடுத்துள்ளதாகவும், அதனை செயல்படுத்துவதே தங்களது பணி என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

உயிருடன் உள்ள 13 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று பல பகுதிகளில் உயிருடன் இருப்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வாக்காளர் பட்டியலில் 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை என்றும், ஒருவர் எப்படி முகவரி இல்லாமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை திட்டம் தொடர்பான சட்டம், மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் ப. சிதம்பரம் விமர்சித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பல மாநிலங்களில் வேலை வாய்ப்பே இல்லாத நிலை உருவாகும் என்றும் கூறினார்.
இந்த திட்டம் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான முக்கிய பிரச்சினையாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.