மறைந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல், அவரது இறுதி விருப்பத்தின்படியே மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காகத் தானமாக வழங்கப்பட உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (MMC) அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். 101 வயது வரை வாழ்ந்து, எளிய மக்களுக்காகத் தன் ரத்தத்தைச் சிந்திப் போராடிய அந்தப் போராளி, மறைந்த பிறகும் மண்ணுக்குள் புதைந்து போகாமல் வருங்கால மருத்துவர்களின் கல்விக்குத் தன் உடலையே கருவியாக மாற்றியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் தனக்குக் கிடைத்த விருதுத் தொகைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் என அனைத்தையும் கட்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் வாரி வழங்கியவர் நல்லகண்ணு. ஒரு சென்ட் நிலம் கூடத் தனக்கெனச் சேர்த்து வைக்காத அந்தத் தூய்மையான அரசியல்வாதி, தற்போது தான் சுமந்து வந்த உடலையும் இந்தச் சமூகத்திற்கே விட்டுச் சென்றுள்ளார். “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற பொதுவுடைமைத் தத்துவத்தை வாழ்ந்து காட்டியது மட்டுமன்றி, மரணத்திற்குப் பின்னும் அதைச் செயல்படுத்திக் காட்டிய நல்லகண்ணுவின் தியாகம் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
