இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஐயா நல்லகண்ணு (101) பிப்ரவரி 25-ஆம் தேதியான இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி கேட்டது முதல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சோகம் சூழ்ந்துள்ளது. எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவரது இழப்பு, வெறும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவரது உடலுக்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

​அந்த வகையில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் ஐயா நல்லகண்ணுவுக்கு உருக்கமான முறையில் இரங்கல் தெரிவித்துள்ளார். “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழ்நாடு மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ரஜினி பதிவிட்டுள்ளார். நல்லகண்ணுவின் தூய்மையான அரசியலை ரஜினிகாந்த் மனதாரப் பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.