மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்சந்தியை சில நிபந்தனைகளுடன் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேசமயம், தடையை முழுமையாக நீக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்து வரும் சூழலில், ஹார்முஸ் நீர்சந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து அதிரடி காட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீர்சந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்” எனப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிய மறுத்துள்ள ஈரான், தற்போது புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து ஈரானின் பிரதிநிதி அலி மௌசவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஹார்முஸ் நீர்சந்தி அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ‘எதிரி நாடுகளின்’ கப்பல்களுக்கு மட்டும் இந்த வழித்தடத்தில் நுழைய அனுமதியில்லை. பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றும் ஏனைய நாடுகள் தடையின்றி இந்த வழியாகச் செல்லலாம்.”
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளின் கப்பல்களுக்கு மறைமுகத் தடையை ஈரான் விதித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் மத்திய கிழக்கில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை மற்றும் உலக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தப் போர் பதற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் அமெரிக்காவின் ராணுவ எச்சரிக்கை, மறுபுறம் ஈரானின் பிடிவாதமான நிபந்தனை என இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
