புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகளை உலகுக்குத் தந்து, நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்தவர் சர் ஐசக் நியூட்டன். ஆனால், அவரது வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்பியலைத் தாண்டி, விவிலிய ரகசியங்கள், காலக்கணக்குகள் மற்றும் மறைபொருள்களை (Theology and Alchemy) ஆராய்வதிலேயே அவர் செலவிட்டார் என்பது பலரும் அறியாத செய்தி. இந்நிலையில், நியூட்டன் எழுதிய 300 ஆண்டுகள் பழமையான ரகசியக் குறிப்பு ஒன்று தற்போது மீண்டும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர் ஐசக் நியூட்டன் கடந்த 1704-ஆம் ஆண்டு தனது கைப்பட எழுதிய சில ரகசியக் குறிப்புகள், டிஜிட்டல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அந்த ஆவணத்தில், கி.பி. 2060-ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது உலக அழிவிற்கான எச்சரிக்கையா என்ற கேள்விக்கு, நியூட்டனின் கணக்கீடுகள் சுவாரஸ்யமான பதிலை அளிக்கின்றன.
நியூட்டன் விவிலியத்தில் உள்ள ‘தானியேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தை’ மிகத் தீவிரமாக ஆய்வு செய்தார். அதில் கூறப்பட்டுள்ள “காலம், காலங்கள் மற்றும் அரை காலம்” (Time, times and half a time) என்ற சூத்திரத்தை அவர் அடிப்படையாகக் கொண்டார். பழங்கால விவிலியக் கணக்கீட்டின்படி, ‘ஒரு நாள் என்பது ஒரு ஆண்டுக்குச் சமம்’ என்பதை அவர் கையாண்டார். இதன் மூலம் 1260 நாட்களை, 1260 ஆண்டுகளாக அவர் மாற்றினார். கி.பி. 800-ஆம் ஆண்டில் ரோமானியப் பேரரசு மற்றும் மத அமைப்புகளின் அதிகார மாற்றத்தை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கருதிய நியூட்டன், பின்வரும் கணக்கீட்டைச் செய்தார்.
அதன்படி இணையதளங்களில் பரப்பப்படுவது போல, 2060-ல் பூமி அழிந்துவிடும் என்று நியூட்டன் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அன்றைய காலகட்டத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்து, ஒரு புதிய தெய்வீக அல்லது பொற்கால யுகம் தொடங்கும் என்பதையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, உலக அழிவு குறித்து அடிக்கடி தேதிகளை அறிவித்து மக்களைப் பீதியடையச் செய்யும் “பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு” முற்றுப்புள்ளி வைக்கவே இந்தக் கணக்கீட்டை அவர் மேற்கொண்டார். “2060-க்கு முன்னதாக உலகம் அழிய எந்தக் காரணமும் இல்லை, ஒருவேளை இதற்குப் பிறகு சில மாற்றங்கள் நிகழலாம்” என்பதே அவரது தீர்க்கமான முடிவாக இருந்தது.
மேலும் நியூட்டனின் இந்த அரிய கையெழுத்துப் பிரதிகள் தற்போது இஸ்ரேல் தேசிய நூலகத்தில் உள்ள ‘யஹூதா கையெழுத்துப் பிரதி சேகரிப்பில்’ (Yahuda collection) மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ‘நியூட்டன் ப்ராஜெக்ட்’ (Newton Project) என்ற சர்வதேசக் குழுவினர் இந்த மர்மக் குறிப்புகளை நவீனத் தொழில்நுட்பம் கொண்டு ஆய்வு செய்து இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
