தமிழகத்தில் வணிக வளாகங்கள்,விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபான சட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகம் செய்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை செயலாளர் சார்பாக மதுவிலக்கு துறை ஆணையர் மனு தாக்கல் செய்தார்.

அதில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒரு நாள் அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என பல நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உரிமங்கள் வழங்கப்படும். அதனால் அரசு உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானது இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.