மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் தேசபக்தி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை “ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்” (தேசிய சரணாகதி சங்கம்) எனச் சாடினார். இந்தியாவில் ‘போலி தேசியவாதத்தை’ காட்டும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், அமெரிக்காவிற்குச் சென்றால் ‘முழுமையான அடிமைத்தனத்தை’ வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் அமெரிக்காவில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ராம் மாதவின் பேச்சு அந்த அமைப்பின் உண்மையான இயல்பை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகமான நாக்பூரிலேயே வைத்து ராகுல் காந்தி இப்படி ஒரு அதிரடி விமர்சனத்தை முன்வைத்தது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
