மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் உள்ள காமோதே பகுதியில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவரால் 3 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 30 வயது நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது ஒரு தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக இந்த நபர் பணியாற்றி வந்துள்ளார். புதன்கிழமை மதியம் சுமார் 12:30 மணியளவில், பள்ளி முடிந்து மாணவர்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிடும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த மற்ற குழந்தைகள் அனைவரும் இறங்கிய நிலையில், கடைசி குழந்தையாக இருந்த 3 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஓட்டுநர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு வந்தடைந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பாட்டியிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கும், காமோதே காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினர், அந்த ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்து வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரை சனிக்கிழமை வரை காவல் துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
