உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ-வும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான குட்டு பண்டிட் தனது மனைவியை நடுவீதியில் வைத்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்ஷஹர் ஷிகார்பூர் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் அமைந்துள்ள அவரது மூன்றாவது மனைவியான அர்ச்சனா பண்டிட்டின் இல்லத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதியன்று பதிவானதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், முன்னாள் எம்.எல்.ஏ குட்டு பண்டிட் தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து தரதரவெனத் தரை வழியாக இழுத்துச் செல்வது போன்ற பதைபதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கணவரின் இந்த வெறிச்செயலை எதிர்த்து அர்ச்சனா கூச்சலிட்டுக் கொண்டே துடைப்பத்தால் அவரைத் திருப்பித் தாக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
➡️ बुलंदशहर में पूर्व विधायक गुड्डू पंडित पर कांग्रेस नेत्री अर्चना पांडा से मारपीट और बदसलूकी का आरोप
➡️ पीड़िता का दावा-घर में घुसकर धक्का दिया, बाल खींचे और गाली-गलौज की VIDEO वायरल
➡️ अर्चना पांडा ने पुलिस को शिकायत देकर मामला दर्ज करने और परिवार की सुरक्षा की मांग की
➡️… pic.twitter.com/HcXQInFvr1— FM News (@FMNewsLive) September 4, 2026
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அர்ச்சனா பண்டிட் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-விடமிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ள அவர், தனது பாதுகாப்பிற்காக வீட்டிற்கு அருகில் சுழற்சி முறை பெண் காவலர்களைப் பணியமர்த்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் தனது மகன் சமர் பண்டிட்டுடன் வீட்டில் இருந்தபோது திடீரென அங்கு வந்த குட்டு பண்டிட், கதவைத் தட்டி வெளியே வருமாறு மிரட்டியதாகவும், கதவைத் திறந்தவுடன் தன்னைத் தாக்கியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டுப் பணியாளர் ஒருவர் தனது மொபைலில் இந்தத் தாக்குதலை வீடியோவாகப் பதிவு செய்ததை அடுத்துவே, குட்டு பண்டிட் அங்கிருந்து பின்வாங்கியதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களுக்கும் குட்டு பண்டிட்டுக்கும் இடையே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு குட்டு பண்டிட்டும் அவரது குடும்பத்தினரும் தங்களை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
மேலும் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் புகாரின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்டு பண்டிட்டிற்கு ஏற்கனவே காஜல் ஷர்மா மற்றும் ஷீத்தல் ஆகிய மனைவியர்கள் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக இந்தத் குடும்பத் தகராறு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
