இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 44.9 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என சுகாதாரத் துறையின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு உடல் பருமன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குழந்தைகளில் கூட இந்தப் பிரச்சனை அதிகரித்து வருவதால், அரசு அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, நாக்பூர் எயிம்ஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், அன்றாட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகள் குறித்த தகவல்களுடன் பலகைகள் வைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் தினசரி உண்ணும் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு, சர்க்கரை இருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சமோசா மற்றும் ஜிலேபி போன்ற சிற்றுண்டிகள், உடலுக்கு தேவையில்லாத மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகளாகக் கருதப்படுகின்றன. எனவே, சிகரெட்டுப் பெட்டியில் உள்ள எச்சரிக்கை வாசகம் போன்று, இவைகளின் பாக்கெட் லேபிளில் சுகாதார எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் என இந்திய இருதயவியல் சங்கம் – நாக்பூர் பகுதி தலைவர் டாக்டர் அமர் அமலே தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல், இந்த ‘எச்சரிக்கை பட்டியலில்’ மேலும் பல இனிப்பு மற்றும் எண்ணெய் அடங்கிய உணவுகளும் விரைவில் சேர்க்கப்படும் எனவும் கூறப்படுகிறது. நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், உணவுப் பழக்கங்களில் மாற்றம் கொண்டு வரவும், இது ஒரு முக்கிய ஆரம்ப படியாக கருதப்படுகிறது.

மக்கள் இனிமேல் சாப்பிடும் உணவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். “சுவைக்கு அடிமையாவது நல்லது இல்லை… சுகாதாரத்தைப் பாதுகாப்பதே முதன்மை” என்ற உண்மையை நினைவூட்டும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.