இன்றைய சமூகத்தில் திருமண முரண்பாடுகள் தீவிரமாகி வருவது கணிசமான அளவில் கவலைக்குரியதாக இருக்கிறது. இது தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள் முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர், தன் மீதும் , தனது குடும்பத்தினர்மீதும் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் நிதின் சம்ப்ரே மற்றும் எம்.எம். நெர்லிகர் அமர்வு முன் நாக்பூர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் முன்னாள் மனைவியின் தரப்பில், “நாங்கள் இருவரும் ஏற்கனவே பிரச்சினைகளை இணக்கமாக தீர்த்து கொண்டு, பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம். எனவே இந்த வழக்கை ரத்து செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, நீதிபதிகள் வழக்கை ரத்து செய்ததுடன், சமூகத்தில் நடைபெறும் திருமண விவகாரங்களைப் பற்றிய சில முக்கியக் கருத்துகளையும் பகிர்ந்தனர்.

“இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் திருமண முரண்பாடுகள் ஒரு சமூக அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் கூட அவர்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்கின்றன. திருமணம் என்பது வெறும் சட்ட ஒப்பந்தம் மட்டுமல்ல; அது ஆன்மீக ரீதியாக இரண்டு ஆன்மாக்களை ஒன்றிணைக்கும் புனித உறவாகும். மேலும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருமணம் ஆபத்தில் உள்ளது.

இந்த வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்களை தவறாக பயன்படுத்தும்போது, மன மற்றும் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதுடன், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தீராத சேதங்கள் ஏற்படுகின்றன” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

திருமண உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் பல இருந்தாலும், அவற்றை தவறாக பயன்படுத்தும் மனநிலையை மாற்றி, இணக்கமாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் மனப்பாங்கு முக்கியம் எனவும், நீதிமன்றம் அதனை ஊக்குவிக்க விரும்புகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இந்த தீர்ப்பும் கருத்துகளும், திருமணத்தில் சிக்கல்களை சட்ட வழியில் தவறாக பயன்படுத்துவதை மீண்டும்  சிந்திக்க வைக்கும் வகையில் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.