சபரிமலை வழக்கில் சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைக்காமல், மொழி மேலாதிக்கம் மற்றும் மத ஒப்பீடுகள் குறித்துப் பேசிய வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள், தற்போது 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வின் முன் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கு சபரிமலை விவகாரத்தைத் தாண்டி, பல்வேறு மதங்களில் உள்ள வழிபாட்டு முறைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்த அடிப்படைச் சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, பாஜக ஆதரவு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் முன்வைத்த கருத்துகள் வழக்கின் சட்ட ரீதியான போக்கிலிருந்து முற்றிலும் விலகி இருந்ததாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தனது வாதத்தில், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே உள்ளதால் ‘தர்மம்’ போன்ற ஆழ்ந்த பொருளுடைய சொற்களை விளக்க முடியாது என்றும், 52 எழுத்துக்களைக் கொண்ட சமஸ்கிருதமே மேலானது என்றும் குறிப்பிட்டார். மேலும், அனைத்து மதங்களும் சமமானவை அல்ல என்றும், பாரதம் கடந்த காலங்களில் துண்டாடப்பட்டதற்குக் காரணமான மத மோதல்கள் குறித்தும் பேசினார்.
வழக்கறிஞரின் இந்த வாதத்தை தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர். மகாதேவன் உடனடியாக இடைமறித்தார். அவர் கூறுகையில், “சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் என்றால், தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. நாம் அந்த விவாதத்திற்குள் செல்லத் தேவையில்லை. எடுத்துக்கொண்ட வழக்கின் சட்டக் கூறுகள் குறித்து மட்டும் பேசுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி நாகரத்னா, கன்னட மொழியிலும் 52 எழுத்துக்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, “ஒரு மதம் மற்றொன்றை விட உயர்ந்தது என்ற வாதத்தை நீதிமன்றத்திற்குள் கொண்டு வராதீர்கள். இங்கு அனைவரும் சமம்” என்று திட்டவட்டமாகக் கூறினார். நீதிபதி சுந்தரேஷ் மற்றும் நீதிபதி அமானுல்லா ஆகியோரும் வழக்கறிஞரின் போக்கைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவாதத்தின் ஊடாக, சமஸ்கிருதச் சொற்கள் மதப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், தமிழ் மொழி இயற்கை மற்றும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்பது மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் மூலம் பேசுபொருளாகியுள்ளது. வழக்கின் அடிப்படைத் தன்மையைப் புரிந்துகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் நின்று வாதங்களை முன்வைக்குமாறு வழக்கறிஞருக்குக் கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், விசாரணையைத் தொடர்ந்தனர்.
