அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக சார்பில் 5 முக்கிய வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 நிதியுதவி மற்றும் ஆண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது:

“அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே இந்த முதற்கட்ட வாக்குறுதிகள் அமைந்துள்ளன. பெண்கள், பட்டியலின மக்கள் மற்றும் ஆண்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன.”

அதிமுகவின் வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகள் மட்டுமே என்ற திமுகவின் ஆர்.எஸ். பாரதியின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த அவர், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

பழைய ஓய்வூதியத் திட்டம், ரூ.100 கேஸ் மானியம் போன்ற அன்றாட மக்களுக்கான திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் இன்னும் செவிமடுக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது திமுகவின் மோசமான நிதி மேலாண்மைக்குச் சான்றாகும்.

அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “பிரதமர் மோடியின் தலைமையையும், திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தையும் ஏற்கும் கட்சிகள் நிச்சயம் எங்களுடன் இணையும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தலைவர்கள் விரைவில் வெளியிடுவார்கள்” என்று அவர்கூறினார்.