அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு வழங்கப்படுவது போலவே ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். மேலும், மகளிருக்கான உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஏற்கனவே அமலில் உள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயணம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அதிமுகவின் இந்த வாக்குறுதிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அதிமுகவின் இலவச பேருந்து பயண அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலவச பேருந்து பயணம் வேண்டும் என்று மக்களோ அல்லது ஆண்களோ யாரிடம் கேட்டார்கள் என்று வினவியுள்ள அவர், அரசாங்கம் முதலில் தரமான பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தற்போது இயக்கப்படும் அரசு பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், மக்கள் பிரதிநிதிகளே அதில் பயணிக்கத் தயங்கும் சூழல் நிலவுவதாகவும் அவர் சாடினார். நம் நாட்டு தாய்மார்களுக்குத் தேவை இலவசங்கள் அல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைவாய்ப்புகளே என்று குறிப்பிட்ட அவர், இலவசங்களை அறிவிப்பதை விடுத்து ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.
