உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலிலும் இந்தியப் பொருளாதாரத்தின் அசாத்திய மீள்திறனைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்கா முதலிடத்திலும், சீனா மற்றும் ஜெர்மனி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ள நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஜிடிபி 7.30 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சி குறித்து உலக வங்கி மற்றும் மூடிஸ் போன்ற சர்வதேச அமைப்புகளும் சாதகமான கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, 2026-இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாகவும், 2027-இல் 6.5 சதவீதமாகவும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வளர்ந்த பாரதம் 2047” என்ற லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், வேலையின்மை விகிதம் குறைந்து வருவதும், ஏற்றுமதித் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதும் இந்தியாவிற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், தொழிலாளர் சட்ட மாற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டு வரும் இந்த வளர்ச்சியானது, நாட்டின் சுதந்திர நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாற்றும் என மத்திய அரசின் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
