இஸ்ரேலில் கணவன் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்காமல், கேரளாவில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (38). நர்சிங் முடித்திருந்த இவர், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் 80 வயது மூதாட்டி ஒருவரைப் பராமரிக்கும் ‘கேர் கிவ்வர்’ (Caregiver) பணியில் ஈடுபட்டு வந்தார்.

சுகுமாரனுக்கும் ரேஷ்மா (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஜூலை மாதம், தான் பணியாற்றி வந்த வீட்டிலேயே சுகுமாரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதே வீட்டில் அவர் பராமரித்து வந்த மூதாட்டியும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அந்நாட்டுப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சுகுமாரனின் உடல் கடந்த புதன்கிழமை கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

கணவனின் திடீர் மறைவால் நிலைகுலைந்து போன ரேஷ்மா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரேஷ்மா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது ஒரு வயது குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.