சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆபாசக் காட்சிகள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

குறிப்பாக, 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், இத்தகைய தேவையற்ற பதிவுகளைத் தானாகவே கண்டறிந்து நீக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். மேலும், குழந்தைகளைத் தவறாகச் சித்தரிக்கும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பயனர்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் ஐடி சட்டம் 2021-ன் கீழ் உள்ள விதிகளை முறையாகப் பின்பற்றாத 25 உள்ளூர் ஓடிடி தளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது எந்தவிதப் பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இணையதளப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபாசப் பதிவுகள் பரவுவதைத் தடுக்கவும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.