தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடவுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

த.வெ.க-வின் கோரிக்கையைப் பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் சலுகை அடிப்படையில் ‘விசில்’ சின்னத்தைப் பொதுச் சின்னமாக அந்த கட்சிக்கு அனுமதித்து கடிதம் அனுப்பியுள்ளது.

கட்சிக்குத் தனிச் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விசில்களை வழங்கியும், இனிப்புகளைப் பகிர்ந்தும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் த.வெ.க நிர்வாகி அஜிதா ஆக்னல் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நிர்வாகிகளுடன் இணைந்து விசில் அடித்துக் கொண்டாடினர்.

சமீபத்தில் கட்சிப் பதவி விவகாரம் தொடர்பாகத் தலைமை மீது அதிருப்தி அடைந்து, மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற அஜிதா ஆக்னல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.