நெல்லை மாநகரத்தில் உள்ள போலீஸ் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக காந்திராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதன்படி சுத்தமல்லியில் காந்திராஜன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் தினமும் அவர் காரில் பணிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் காந்திராஜன் வேலை முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற பேருந்து ஒன்று திடீரென்று நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக பேருந்தின் பின்னால் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தன் வாகனத்தை நிறுத்தினார். இதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் வண்டி வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கோபமடைந்த வாலிபர் காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தி ராஜனும் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து காந்திராஜன் கோபத்தில் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது முன்னாள் நின்ற வாலிபர் காரின் முன் பக்கமுள்ள பேனட்டில் ஏறி காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் காந்திராஜனை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.