பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ் அள்ளுவதற்காக இளம்பெண்கள் செய்யும் விபரீத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தர்பங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் போஜ்புரி பாடலுக்குத் தனது இடுப்பிலிருந்து பிஸ்டலை வெளியே எடுத்து காற்றில் ஆட்டம் போட்டுக் கொண்டே ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தத் திடுக்கிடும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
தர்பங்கா மாவட்டம் கன்சியாம்பூர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்குலாம் யாதவ் என்பவரது மனைவி லாகோ தேவி இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது வீட்டின் ஒரு பாடலுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடியபடியே, திடீரென தனது இடுப்பில் செருகப்பட்டிருந்த துப்பாக்கியை உருவி காற்றில் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறை அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது.
இதனைத் தொடர்ந்து உஷாரான போலீசார், கிராமக் காவலாளர்களின் உதவியுடன் அந்தப் பெண் வசிக்கும் வீையைக் கண்டறிந்து அதிரடியாகச் சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிஸ்டல், கூடுதல் மேகசின் மற்றும் பர்ஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு தோட்டாக்கள்ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட லாகோ தேவி மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சோதனையின்போது தலைமறைவான அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் பிரபலமடைவதற்காகப் பொதுமக்கள் இதுபோன்று ஆயுதங்களைக் கொண்டு அராஜகம் செய்வதோ அல்லது சட்டம்-ஒழுங்கை மீறுவதோ கடும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
