மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் தாய் சேய் நல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி செலுத்தினர். இந்நிலையில் அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது நேரத்தில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்நிலை சீரானது. அதே நேரம் 5 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதாவது பெண்களுக்கு போடப்பட்ட ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவரும் என தலைமை மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
