நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் அருகே செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கோவில் வந்துள்ளது.

இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்திருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதனால் கும்பாபிஷேகத்தை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது எனக் கூறியும் கோவில் முன்பாக நேற்று தர்ணா போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது, கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு அனைத்து மக்களையும் இணைத்து சென்னை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஒரு தரப்பினர் மட்டும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதனை கண்டித்து தற்போது நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் அதனால் இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.