தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 26-ம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நிலையம் அருகே நேற்று காலை ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் மறைத்து அவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது, தஞ்சாவூர் மாநகரில் தினம்தோறும் 300 முதல் 500 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 80 சதவீத மக்கள் ஹெல்மெட் அணிந்தபடி வாகனம் ஓட்டுகிறார்கள். இருப்பினும்  பொது மக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.