கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பல்லாரி நோக்கி இன்று (மார்ச் 15) அதிகாலை 5 காவல்துறை துணை ஆய்வாளர்கள் (SI) காரில் சென்று கொண்டிருந்தனர். காலை 7 மணியளவில் பல்லாரி சாலையில் உள்ள பிரகாஷ் ஸ்பான்ஜ் எஃகு நிறுவனம் அருகே கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்றால், காரின் முன்பகுதி அப்பளமாய் நொறுங்கி, உள்ளே இருந்த 3 துணை ஆய்வாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்ற 2 துணை ஆய்வாளர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் பணியின் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ சென்ற காவலர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது அம்மாநில காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்குக் காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
