குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் ஜோடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சோனு ரபாரியும், 21 வயது இளைஞர் நவீன் ஜீவாபாயும் தீவிரமாகக் காதலித்து வந்தனர்.
இதனால் இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முதல் இருவரும் திடீரென மாயமாகினர். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த போலீசார், பெண்ணின் குடும்பத்தினர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம் ஜோடியை அவர்களே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.
மேலும் விசாரணையில் வெளியான தகவலின்படி, சோனுவின் தந்தை, தம்பி மற்றும் உறவினர் ஒருவர் இணைந்து, அந்த ஜோடியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களைக் காதலைக் கைவிடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலங்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் பின்னர், தங்களுக்கு எதுவும் தெரியாதது போல மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளனர். தற்போது மூவரையும் கைது செய்துள்ள போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் பெண்ணின் தாயிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
