மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து இந்தியாவில் உள்ள ஈரானிய தூதுவர் மஜித் ஹகீம் இலாஹி அளித்த பேட்டி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. போரைத் தங்களின் விருப்பமாகத் தாங்கள் ஒருபோதும் கருதவில்லை என்றும், அமைதியை நிலைநாட்ட அண்டை நாடுகளுடன் இணைந்து பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக இறுதிவரை போராடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். தற்போதைய சூழலில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரத் தட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், தற்காப்பிற்காகப் போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய இலாஹி, அமெரிக்காவே இந்தப் போரைத் தொடங்கியதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தப் போர் இன்னும் ஐந்து ஆண்டுகள் நீடித்தாலும் அதனை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாகவும், போரை நிறுத்த உலகத் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.