சென்னை நகரிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே இயக்குவதற்குத் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சர் விஜய் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டாலும், தற்போதைய சூழலில் அது தென் மாவட்ட பொதுமக்களுக்கு முழுமையான வசதியையோ அல்லது எளிதான அணுகலையோ வழங்கவில்லை என்பது பயணிகளின் பரவலான கருத்தாக உள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ​மேலும், சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து பயணிகள் கிளாம்பாக்கம் செல்வதற்காக, ஒரு பேருந்துக்கு பதிலாக 40-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் மற்றும் கூடுதல் மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலும், வாகனப் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடும் முன்பை விட பல மடங்கு அதிகரித்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலையிட்டு பயணிகளின் நலன் கருதி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.