மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிக்கும் வகையில் மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிர சிகிச்சையில் இருக்கும் தனது கணவர், 100 சதவீத மாற்றுத்திறனாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நலன் கருதி தங்களை பாதுகாவலராக நியமிக்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, “மனுதாரரின் கணவர் சுயமாக எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதால், அவரது நலனை முன்னிறுத்தி மனைவியை பாதுகாவலராக நியமிக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

மேலும், தந்தையின் சொத்துக்களை பராமரிக்கத் தாய்க்கு அதிகாரம் வழங்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தம்பதியரின் இரு குழந்தைகளும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, கணவரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் மனைவிக்கு வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.