தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் தொடக்க நாளில், பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் முத்துசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டசபை அமர்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதில் நயினார் நாகேந்திரனைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
“நயினார் நாகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் போதும் அவர் சிரித்துக்கொண்டே செல்வார். கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்பவர். அவரை நான் ஒருபோதும் கோபப்படுவதைக் கண்டதில்லை. யாரும் கோபம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளக்கூடியவர் நயினார் நாகேந்திரன்,” எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும் நயினார் நாகேந்திரன் இதுவரை கோபப்பட்டு தான் பார்த்ததில்லை எனவும் கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடமும் பண்புடனும் அன்புடனும் பழகக் கூடியவர் என்றும் கோபமே படாத அரசியல்வாதி என்றும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நிலையில் 64 முடிந்த 65 வயது ஆகும் அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். முதல்வரின் இந்த பாராட்டு சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது. பலர் சிரிப்புடன் கைதட்டினர்.