தமிழக முதலமைச்சராகப் பதவியேற்று, தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய சி. ஜோசப் விஜய் அவர்கள், இன்று மதியம் அங்கிருந்து புறப்பட்டு நேராக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். அங்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெரியார் திடலுக்கு விஜய் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஆசிரியர் கி. வீரமணியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். “சமூகநீதி மற்றும் சமத்துவப் பாதையில் புதிய அரசு பயணிக்க வேண்டும்” என ஆசிரியர் வீரமணி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பதவியேற்ற முதல் நாளிலேயே பெரியார் திடலுக்குச் சென்று ஆசி பெற்ற விஜய்யின் இந்த நடவடிக்கை, அவர் திராவிடக் கொள்கைகளையும் சமூகநீதியையும் முன்னிறுத்தி ஆட்சி செய்வார் என்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
