தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள், அதிமுக-வின் புதிய கூட்டணி முயற்சிகளைப் பார்த்து ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளார். “மனதுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் வலுக்கட்டாயமாகப் போய் ஒட்டிக்கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்கினால், அது எப்படித் தேர்தலில் வெற்றி பெறும்?” என்று அவர் அதிமுக-வைக் கிண்டலடித்துள்ளார். மேலும், “அதிமுக என்கிற கட்சி இன்னும் கொஞ்ச நாளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் கவலையாக இருக்கிறது” என்று அவர் சொன்னது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ‘பத்திரமா இருங்க’ன்னு சொல்றது வழிகாட்டுதலா இல்ல ‘முற்றுப்புள்ளி’ வைக்கப்போறாங்களான்னு அரசியல் விமர்சகர்கள் விவாதிச்சுட்டு இருக்காங்க.

​அதேபோல், பிரதமர் மோடியின் தமிழக வருகையைப் பற்றியும் கனிமொழி அக்கா சும்மா விடவில்லை. “தேர்தல் வரப்போகிறது, அதனால்தான் பிரதமர் மோடிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தமிழகத்தின் நினைவு வருகிறது. தேர்தல் முடிந்தால் அவர் இந்தப் பக்கம் வரமாட்டார்” என ஸ்டாலின் பாணியிலேயே அவரும் விமர்சித்துள்ளார். பாஜக-வுடன் அதிமுக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கூட்டணி வைக்கத் துடிப்பதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, கொள்கை இல்லாத இந்தத் திணறல்கள் 2026 தேர்தலில் எடுபடாது என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.