மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார். “இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார்” என்று அவர் அதிரடியாகக் கணித்துள்ளார். திமுக அரசை ஒரு “பூஜ்ஜிய அரசு” என்று விமர்சித்த அவர், இந்த ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முழங்கினார். ஊழல் என்று சொன்னாலே அதற்கு மறுபெயர் திமுகதான் என்று சாடிய அன்புமணி, திமுகவின் முறைகேடுகளைப் பட்டியலிட்டு மேடையிலேயே அனல் பறக்க வைத்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அன்புமணி, “முதல்வர் எப்போது வாய் திறந்தாலும் பொய் மட்டுமே பேசுகிறார்” என்று குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகச் சாடிய அவர், NDA கூட்டணிதான் தமிழகத்திற்கு விடியலைத் தரும் என்று உறுதிபடக் கூறினார். 2026 தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில், “இரண்டே மாதத்தில் ஆட்சி மாற்றம்” என்று அன்புமணி சொன்னது, கூட்டணிக் கட்சியினருக்கே ஒரு பெரிய சஸ்பென்ஸாகவும், அதே சமயம் செம பூஸ்ட்டாகவும் அமைந்துள்ளது.
