பலமொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இதில் அவரது பாத்திரம் மிக நுணுக்கமான உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாதாகவும், அந்த அனுபவம் தான் தேசிய விருதுக்கு வழிவகுத்தது என கூறப்படுகிறது.
தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன் தலைவி படத்திலும், மீண்டும் தனுஷுடன் இட்லி கடை படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில், நித்யா மேனன் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் இட்லி கடை திரைப்படம் குறித்து பேசும் போது, “இந்த படத்துக்காக மாட்டுச்சாணம் எப்படி அள்ளுவது, உருட்டுவது, சுழற்றுவது என்பதை வாழ்நாளில் முதல் முறையாக கற்றுக்கொண்டேன். படக்குழு என்னிடம் – நீ இது செய்ய தயார் தானா? என்று கேட்டார்கள். நானும் தயங்காமல் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.
நான் தேசிய விருது வாங்க டெல்லிக்கு போன அதே காலத்தில் தான், அந்த சாணம் காட்சி படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்தக் கையாலேயே நான் தேசிய விருது வாங்கினேன். ஆனால் அதிலேயே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த அனுபவங்களை எனக்கு கொடுத்த ‘இட்லி கடை’ படம் எனக்காக ஒரு அரிய வாய்ப்பு” என கூறியுள்ளார்.
இந்த உணர்வுபூர்வமான பகிர்வை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்று, “நடிப்புக்காக எதையும் செய்வதற்காக தயாராக இருப்பது தான் ஒரு உண்மையான நடிகையின் பெருமை” என்று பாராட்டி வருகின்றனர். மாட்டுச்சாணம் பற்றிய உரையாடல் ஒரு சிரிப்பையும் ஏற்படுத்தினாலும், அதற்கு பின்னால் இருக்கும் கலைஞரின் பணிவும், தொழில்முனைப்பும் பேசப்படும் விஷயமாகி வருகிறது.
