பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி கோன் பனேகா குரோற்பதி (KBC) மூலம் 5 கோடி ரூபாய் வென்று, இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த சுஷில் குமார். எளிய குடும்பத்தில் பிறந்த அவர், KBC ஆரம்பித்த 2000-ஆம் ஆண்டில் டிவி கூட இல்லாமல், அயலவரின் வீட்டில் நிகழ்ச்சியை பார்த்து ஒருநாள் ஹாட் சீட்டில் உட்கார வேண்டும் என்று கனவு கண்டார். அதே நேரத்தில், பிபிஎஸ்சி மற்றும் ரெயில்வே தேர்வுகளுக்குத் தயாராகி, நூலகத்தில் தினமும் பொது அறிவை மேம்படுத்திக் கொண்டிருந்தார்.
அந்த கனவு நனவாகி, KBC மேடையில் பங்கேற்ற அவர், 5 கோடி ரூபாயை வென்று, நாட்டின் முதல் பெரும் பரிசு பெற்ற போட்டியாளராக வரலாறு படைத்தார். ஆனால், சில மாதங்களிலேயே, தன்னுடைய செல்வத்தை இழந்து, நிதி முறிவுக்கு ஆளானார். 2020-ஆம் ஆண்டு பேஸ்புக்கில் அவர் பகிர்ந்த பதிவில், வெற்றிக்குப் பிறகு தன்னார்வத் தொண்டு பணிகளில் ஈடுபட்டு, பலர் தனது நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும், இதனால் மனைவியுடன் உறவில் பிளவு ஏற்பட்டதாகவும் வெளிப்படுத்தினார். “நான் ‘ரகசிய நன்கொடை’ கொடுக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன். மாதத்திற்கு ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். பலர் என்னை ஏமாற்றினர். மனைவி, நான் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்பதை புரிந்துகொள்ளவில்லை என்று கூறுவார்” என்று அவர் எழுதியிருந்தார்.
ஒரு பத்திரிகையாளரிடம் சிரிப்பாக “எனக்கு இரண்டு பசுக்கள் மட்டுமே, பால் விற்று வாழ்கிறேன்” என்று கூறியதும், அது செய்தியாகி, பலரும் அவரைத் தவிர்த்தனர். இந்த தனிமையில், டெல்லியில் தங்கிய நாட்களில் மது மற்றும் புகை பழக்கத்துக்கு அடிமையானார். “ஊடகங்களை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, சுஷில் குமார் அமைதியான வாழ்க்கையைத் தேர்வு செய்து, கல்வித் துறையில் கவனம் செலுத்தினார். மும்பைக்கு சென்று சினிமாவில் முயற்சித்தும் வெற்றி பெறாத அவர், தற்போது அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். ஒருகாலத்தில் நாட்டின் கண்களில் ஹீரோவாக இருந்த சுஷில் குமார், இன்று எளிய வாழ்க்கையில் நிம்மதியை கண்டுள்ளார்.
